×

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் அதிமுக கொடியுடன் காரில் சென்ற சசிகலா: தனியார் ரிசார்ட்டில் ஒருவாரம் குவாரன்டைன்

பெங்களூரு: பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தேவனஹள்ளியில் உள்ள தனியார் ரிசார்ட்டில் 7 நாட்கள் தங்கி தனிமைப்படுத்தி கொள்கிறார். பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் மூச்சு திணறல் காரணமாக சேர்க்கப்பட்ட, சசிகலாவிற்கு கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கான தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாட்களாக உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ரத்த அழுத்தம், சக்கரையின் அளவு, மூச்சு திணறல் போன்றவை சீரானது.

இதையடுத்து நேற்று காலை மருத்துவமனை மருத்துவர்கள் சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்தனர். அவரை அழைத்து செல்வதற்காக டி.டி.வி தினகரன் மற்றும்  இளவரசியின் மகன் விவேக் ஆகியோர் வந்திருந்தனர். 12 மணியளவில்  மருத்துவமனையில் இருந்து கொரோனா பாதுகாப்பு கிட் அணிந்திருந்த ஊழியர்கள் சசிகலாவை வெளியே அழைத்து வந்தனர். படிகட்டுகளில் தாமாக இறங்கி வந்த சசிகலா, ஜெயலலிதா பயன்படுத்திய அதிமுக கொடி கட்டிய காரின் முன் இருக்கையில் அமர்ந்தபடி அங்கிருந்து கடந்து சென்றார். காரின் முன்புறமும், பின்புறமும் மெய்காப்பாளர்கள் அடங்கிய வாகனம் மற்றும் உறவினர்கள் வாகனம் என்று 5, 6 வாகனங்கள் அவரை பின்தொடர்ந்து சென்றது.

தேவனஹள்ளியை அடுத்த நந்திஹில்ஸ் பகுதியில் உள்ள பிரிஸ்ட்டீஜ் கோல்ப்சர் என்ற ரிசார்ட்டில் அவர் தங்கியுள்ளார். மருத்துவர்கள் அறிவுரைப்படி ஒரு வாரம் அங்கு குவாரன்டைனில் இருந்துவிட்டு, பின்னர் தமிழகத்திற்கு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை சசிகலா உறவினர்கள் தரப்பிலும் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில் அவர் ஏன் அதிமுக கொடி கட்டிய காரில் சென்றார் என்ற பரபரப்பு நிலவி வருகிறது. மருத்துவமனையில் சசிகலா டிஸ்சார்ஜ் செய்வதை பார்க்க ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் தொண்டர்கள் வந்திருந்தனர்.  

இதற்கிடையில் மருத்துவமனையில் இருக்கும் இளவரசி வரும் 5ம் தேதி விடுதலையாக இருக்கிறார். அன்றைய தினமே அவர் டிஸ்சார்ஜ் செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள்  வெளியாகியுள்ளது. இதையடுத்து அவரும் தேவனஹள்ளியில் உள்ள ரிசார்ட்டிற்கு சென்று இரண்டொருநாள் ஓய்வு எடுத்துவிட்டு, சசிகலாவுடன் சென்னை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது நெருங்கிய வட்டாரங்கள் தரப்பில் கூறும்போது, பிப்.7ம் தேதி அல்லது பிப்.8ம் தேதி அவர் சென்னைக்கு செல்வார் என்று தெரியவந்துள்ளது. மருத்துவமனையில் சசிகலாவை டிஸ்சார்ஜ் செய்வதையொட்டி, அவரது குடும்ப மருத்துவர்கள், வக்கீல்கள் பி.வி செல்வகுமார், டி முத்துகுமார், ஏ.அசோகன் உள்பட பலர் வந்திருந்தனர்.

* பொதுசெயலாளர் சசிகலா தான்
பெங்களூருவில் டி.டி.வி தினகரன் அளித்த பேட்டியில், சசிகலாவிற்கு அதிமுக கொடியை பயன்படுத்தும் உரிமை உள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாதான் உள்ளார். அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இன்னும் தீர்ப்பு வரவில்லை. அதிமுகவை மீட்டெடுக்கவே, அமமுக தொடங்கப்பட்டது. பொதுச்செயலாளரை யாரும், நீக்க முடியாது. நீதிமன்றத்திலும் 2017ம் ஆண்டு  கூட்டிய பொது குழு கூட்டம் செல்லாது என்றுதான் கூறி வருகிறோம். விரைவில் இதில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பொறுத்திருந்து பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

* குவாரன்டைன் கட்டாயம்
விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் ரமேஷ் கிருஷ்ணா தரப்பில் கூறும்போது; சசிகலா 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதில் கடைசி 3 நாட்கள் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கொரோனா தொற்றிற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. இதையடுத்து நேற்று காலை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைப்படி அவர், இன்னும் 7 நாட்கள் ஹோம் குவாரன்டைனில் இருக்கவேண்டுமென்று அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

Tags : Sasikala ,hospital ,AIADMK ,resort , Sasikala in car with AIADMK flag discharged from hospital: Quarantine for a week at a private resort
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...